ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்:  சிம்லா

டிசம்பர் மாதம் வந்துவிட்டது. பனிக்காலம் தொடங்கிவிட்டது. உறைபனியையும், வெண்  பூவாய் விழும் பனிமழையையும் ரசிக்க விரும்புபவர்கள் சிம்லாவிற்குச்

Updated On :19 டிசம்பர் 2015, 10:52 am
Story image

டிசம்பர் மாதம் வந்துவிட்டது. பனிக்காலம் தொடங்கிவிட்டது. உறைபனியையும், வெண்  பூவாய் விழும் பனிமழையையும் ரசிக்க விரும்புபவர்கள் சிம்லாவிற்குச் செல்ல வேண்டிய காலம் இதுதான். ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகிய சிம்லா நமக்கு சுவிட்சர்லாந்துதான்.

இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் மலைப்பிரதேசத்தில் அமைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். சுற்றிலும் அடர்ந்த காடுகளுடன், அழகான சுற்றுச்சூழல் கொண்ட ஊர். இந்து கடவுள் சியாமளா தேவியினைப் போற்றும் வகையில் சிம்லா எனப் பெயர் பெற்றது.

உறைபனி காலம்

Story image

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்றால், காலை நேரத்தில் காணும் இடங்களும், பார்க்கும் பொருள்களும் பனிப்போர்வை போர்த்திக் கொண்டு வெண்மை நிறத்தில் பளிங்கு கல் போல் தோன்றுவதைக் காணலாம். கனமான கம்பளி ஆடைக்குள்ளும் சில்லென்று குளிர் உடலை நடுங்க வைக்கும். பல திரைப்படங்களில் கண்டு ரசித்த, பனித்துகள்கள் மழையாய் பொழியும் காட்சியினை நேரில் கண்டு ரசிக்கலாம். இக் காலத்தில் இங்கு வெப்பநிலை  7°C  முதல் 10°C  வரைதான் இருக்கும்.

ஆசியா கண்டத்தின் இயற்கை பனிச்சறுக்கு போட்டிகளம் இங்கு மட்டுமே உள்ளது. பனிக்காலத்தில் மட்டும் மாநில மற்றும் இந்திய அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது.

கோடைகாலம்:

கடும் குளிரைத் தாங்க முடியாதவர்களுக்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலம் ஏற்ற சீசன். இதமான குளிரை அனுபவிக்கலாம். இந்நாட்களில் வெப்பநிலை 14°C  முதல் 20°C  வரை இருக்கும். அதன்பின் மழைக்காலம் தொடங்கிவிடும்.

பழமையான அழகிய கட்டடங்கள்:

Story image

சிம்லா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது. அவற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டடங்கள் முக்கியமானவை.

Story image

தற்போதைய சிம்லா இருக்கும் நிலப்பகுதி 18-ஆம் நூற்றாண்டில் அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது. மக்கள் நடமாட்டமும் மிகக் குறைவு. இப்பகுதியினை ஆங்கிலேயர்கள் ""குர்க்கா போரில்'' கைப்பற்றினார்கள். பின்னர் ""ஜாக்கூ மலை'' (Jakhoo hill) மற்றும் பராஸ்பெக்ட் மலை (Prospect hill)  என்ற இரு குன்றுகளுக்கு இடையில் கட்டடங்களைக் கட்டி கோடை வசிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். 1822-இல்தான் முதல் கட்டடம் கட்டப்பட்டது. அதன்பின் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து தற்போதைய சிம்லா நகரம் உருவானது. தற்போதும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பல அழகிய கட்டடங்கள் பாரம்பரிய அழகு கெடாமல் பராமரிக்கப்பட்டு, பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Story image

உயர்கல்வி நிலையமாக உள்ள ராஷ்டிரபதி நிவாஸ் (Rashtrapathi Niwas) என்றழைக்கப்படும் முன்னாள் வைசிராய் மாளிகை, ஆக்லாந்து இல்லம் (Auckland House) கோர்டான் கோட்டை (Garton castle)  பீட்டர் ஹாப் இல்லம் (Peter hoff house), கெயிட்டி திரையரங்கம் (The Gaiety Theatre) மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்ட கிறிஸ்து சர்ச் முதலியவை சில சிறப்பான தோற்றம் கொண்ட கட்டடங்கள் ஆகும்.

கல்கா (Kalka)  - சிம்லா (SHIMLA)  ரயில்:

Story image

 எல்லோரும் ரயிலில் பலமுறை சென்றிருப்போம். ஆனால் இந்த ரயிலில் செல்வதென்பது ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட பொம்மை ரயில் பயணம்.

சிம்லாவிற்கு ரயிலில் செல்வதற்கு சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள கல்கா நகர் மட்டுமே ஒரே வழி. 1906-ஆம் ஆண்டு கல்கா - சிம்லா ரயில் பாதை ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. ரயில் போக்குவரத்தில் ஆங்கிலேயப் பொறியாளர்களின் மிகப் பெரிய சாதனைதான் இந்த பாதை.

Story image

பல வளைவுகள், 806-க்கும் அதிகமான பாலங்கள், 103-குகைகள் கொண்ட நீண்ட தூர குறுகிய ரயில் பாதை. பனி மேகங்கள் சூழ இந்த ரயிலில் பயணிப்பது என்பது மிக ரம்மியமாக இருக்கும். 96 கி.மீ. தூரத்திற்கு மிக செங்குத்தாக இந்த ரயில் மேலே உயர்ந்து செல்வது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

உயரமான அனுமான் சிலை :

Story image

  ஜக்கூ மலை உச்சியில் அனுமார் கோயில் உள்ளது. இங்கு 108 அடி உயர அனுமார் சிலை உள்ளது. 8,100 அடி உயர மலை மீது அமைந்துள்ள உயரமான சிலை. உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள மிக உயரமான சிலை இதுதான்.

தாரா தேவி மலையின் உச்சியில் உள்ள நட்சத்திர தேவதைகளுக்கான தாரா தேவி கோயில். ஹிமாச்சல பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டை அறிய உதவும் அரசு அருங்காட்சியகம், சம்மர்ஹில்ஸ் எனப்படும் கோடை மலை, டாட்டா பாணி எனப்படும் கந்தக வெந்நீர் ஊற்று முதலியவை சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய இடங்கள்.

 இங்குள்ள "ரேணுகா ஏரி'யில் படகு சவாரியும் உண்டு

அழகான நினைவுப் பொருட்களும், பரிசுப் பொருட்களும் வாங்கச் சிறந்த இடம் சிம்லா. இங்குள்ள மால் சாலை மற்றும் "லக்கர் பஜார்' பகுதிக்குச் சென்றால் சிம்லாவின் புகழ்பெற்ற பல பொருட்களை வாங்கலாம்.

Story image

எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட சால்கள், கைக்குட்டைகள், கை உறைகள், தொப்பிகள் மற்றும் அழகான கம்பளிகள், கை விசிறிகள், தரை விரிப்புகள் போன்றவை இங்கு மிக பிரபலம்.

 மரத்தாலான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிறிய பெட்டிகள், கிண்ணங்கள், பல உருவ பொம்மைகள் போன்றவற்றை லக்கர் பஜாரில் வாங்கலாம்.

 இவற்றைத் தவிர தோலில் செய்யப்பட்ட பொருட்களும், அழகிய மணிகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் போன்றவற்றை நினைவுப் பொருட்களாக வாங்கலாம்.

 சிம்லாவிற்குச் சென்று ரயில் பயணத்தையும், இயற்கை அழகையும் ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் சிம்லா பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.